3. ஆலு இம்ரான் - குர்ஆன்
- 1. அலிஃப், லாம், மீம்.
- 2. அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
- 3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
- 4. இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
- 5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
- 6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
- 7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.