30. அர் ரூம் - குர்ஆன்
- 1. அலிஃப், லாம், மீம்.
- 2. ரோம் தோல்வியடைந்து விட்டது.
- 3. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
- 4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள்.
- 5. அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
- 6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
- 7. அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
- 8. அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.