35. ஃபாத்திர் - குர்ஆன்
- 1. அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
- 2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
- 3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
- 4. இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
- 5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
- 6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.